அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.

சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.


இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால்  அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 


சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....


ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு

அருளான அஞ்சனா தேவிமூலம்

பேச்சப்பா பேசாத மவுனமூலம்

பிலமான புலத்தியனே சொல்லக்கேளு

மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்

முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி

காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று

கண்ணார நூறுருவிற் காணலாமே.


காணுகிற விதமென்ன மைந்தாகேளு

கற்பூர தீபஒளி சோதிபோலே

தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று

சோதியெனு மஞ்சனா தேவியென்று

பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு

பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி

ஊணிமன மொன்றாக நீறுசாத்தி

உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.


பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண

பதிவான இருதயமே வாசமாகி

முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே

முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்

கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று

காணுதடா அண்டபதங் கண்ணிநேரே

உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்

ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.


ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி

ஊசாடு மஞ்சனா தேவிமூலம்

நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி

நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு

சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு

திருவான அஞ்சனா தேவிதன்னால்

கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்

காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.


கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து

கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு

பொன்னான பூமிநடுப் பாதளத்தில்

பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்

முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்

மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்

மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு

மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.


மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.


இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக